ஒரு நாள் மயில் ஒன்று கடவுளை வேண்டித் தவம் இருந்தது.
மயிலின் கடுமையான தவம் கண்டு மெச்சிய கடவுள், அதன் முன் தோன்றி காட்சி கொடுத்தார்.
அழகிய மயிலே உன் தவத்தை கண்டு உள்ளம் மகிழ்ந்தோம்.
உன் தவத்தின் நோக்கம் என்ன என்று சொல், என்றார் கடவுள்.
எனக்கு நீண்ட நாளாக ஒரு கவலை மனதுக்குள் இருந்து வாட்டுகிறது.
சரி, என்னிடம் சொல். நான் கேட்கிறேன் என்றார் கடவுள் ஆதரவாக.
என் குரலே எனக்கு பிடிக்கவில்லை. கருப்பாய் பிறந்துள்ள குயிலுக்கு மட்டும் குரல் இனிமையாக இருக்கிறதே என மயில் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியது.
அழகு மயிலே உனக்கென்ன குறைச்சல், நீதான் பறவைகளில் அழகானவன்.
உன் கழுத்து அழகும்,தோகையின் அழகும் வேறு எந்த பறவைகளுக்குக்காவது படைக்கப்பட்டுள்ளதா.?
நீ தோகை விரித்து ஆடும் போது எவ்வளவு அழகாய் இருக்கிறாய் தெரியுமா என கடவுள் சொன்னாலும் மயில் சமாதானம் அடையவில்லை.
நீங்கள் சொல்வதுயெல்லாம் உண்மைதான் இருப்பினும்,என் குரல் இன்னும் அழகாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.பறவைகளில் எல்லாவற்றிலும் நானே முதன்மையாய் இருந்திருப்பேன் அல்லவா? என்றது மயில்.
எல்லா குணங்களும் ஒருவருக்கே அமைந்து விடாது.
குறை,நிறை இருக்கத்தான் செய்யும்.
"நிறையை கண்டு மனம் மகிழ வேண்டியதுதானே" என்றார் கடவுள்.
கழுகு வலிமையானது.
குயில் பாடும் திறன் பெற்றது.
கிளி பேசும் ஆற்றல் பெற்றது.
உனக்குத்தான் தகுதிகள் அதிகம்.
எனவே, அதை எண்ணிப் பெருமைப்படு என்று சொல்லி கடவுள் மறைந்தார்.
நீதி:
குறைகளையே காலம் முழுவதும் நினைத்து கொண்டு இருக்காமல், உன் நிறைகளை அறிந்து அதை
மேலும் நன்கு வளர்த்து கொண்டு சிறப்புடன் வாழ்வதே "இனிய வாழ்க்கையாகும்."
No comments:
Post a Comment